13 ஆவது திருத்தச் சட்டத்தை பலப்படுத்துவதே சிறந்தது!

புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதை விட நடைமுறையில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை பலபடுத்துவதே சிறந்தது என ஈ.பி.டி.பி. தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

வவுனியாவில் (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறினார்.

அத்துடன், 13 ஆவது திருத்தச்சட்டத்தை மேற்கொண்டு பலப்படுத்தி அதனூடான பொது இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதன்படி வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் விசேட பிரச்சினை என்பதால் அவர்களுக்கு விசேட அதிகாரங்கள் தேவையென்ற வகையிலும், கிடைக்கப்பெறும் அதிகாரங்கள் மீளப்பெற்றுக்கொள்ள முடியாது என்ற விடயத்தையும் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.