போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை ஜனாதிபதி வெளிக்காட்ட வேண்டும்!

போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை ஜனாதிபதி வெளியிட வேண்டுமென விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தெஹியோவிட்ட தமிழ் மகாவித்தியாலயத்தின் புதிய மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் (சனிக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கை போதைப் பொருள் கடத்தல்காரர்களின் மத்திய நிலையமாக மாறியிருப்பதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதனை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி எடுத்து வருகின்ற நடவடிக்கைகளை நான் வெகுவாக பாராட்டுகின்றேன்.

இதுவரை காலமும் இருந்த ஜனாதிபதிகளில் மைத்திரிபால சிறிசேனவே இதற்கான அதிகமான முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றமையை காணமுடிகின்றது.

எங்களுடைய நாடு சர்வதேச ரீதியாக போதைவஸ்து கடத்தலில் இன்று பேசப்பட்டு வருகின்றது. நாள்தோறும் கடத்தல்காரர்கள் பிடிபடுகின்றார்கள்.

இது தொடர்பான செய்திகள் இல்லாத நாளே இல்லை என்று கூறலாம். இது நமது நாட்டிற்கு ஒரு நல்ல விடயமல்ல. இதனை முற்றாக இல்லாது செய்ய வேண்டும்.

தற்பொழுது டுபாய் நாட்டில் பிடிபட்டுள்ள எமது நாட்டைச் சேர்ந்த பிரபல போதவஸ்து வியாபாரிகளை இலங்கைக்கு கொண்டுவர வேண்டும்.

அவர்களின் மூலமாக இலங்கையில் யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றார்களோ அவர்களுடைய பெயர் பட்டியலை அறிந்து அவர்கள் அனைவரையும் இந்த நாட்டிற்கு அறிமுகம் செய்யவேண்டும். அப்படி செய்வதோடு அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த தொழிலில் ஈடுபடுகின்றவர்களை கடுமையான தண்டனைக்கு உட்படுத்தாவிட்டால் போதைப் பொருள் கடத்தலை இல்லாதொழிக்க முடியாது.

இன்று இந்த தீய பழக்கமானது நாடு பூராகவும் பரவியிருக்கின்றது. விசேடமாக பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து இந்த வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனவே இதனை இல்லாதொழிக்காவிட்டால் எதிர்காலத்தில் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியாது. எனவே போதைப்பொருளை இல்லாதொழிக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.