முற்றாக தோல்வி கண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திரம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாக தோல்வி கண்டுள்ளது என்பதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் தெரிவித்திருப்பதன் ஊடாக தங்களது தோல்வியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கடந்த நான்கு வருடமாக தமிழ் பேசும் மக்களுடைய பேராதரவுடன் வந்த அரசாங்கம் தமிழ் மக்களின் குறைந்த பட்சமான அன்றாட பிரச்சினையை கூட தீர்க்கவில்லை.

விசேடமாக புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டு வரப்படும், அதன் மூலம் நிரந்தரமான அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் தற்போது மீறப்பட்டுள்ளது.

இவ்வருடம் மாகாணசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் என தேர்தல் ஆண்டாக மாத்திரமே இருக்கப்போகின்றது.

இப்படியான தேர்தல் ஆண்டுக்காலத்திலே தேசிய அரசாங்கத்தினால் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வரப்படும் என்ற விடயம் நடக்கப்போவது இல்லை.

மேலும், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, காணாமல் போனோர் போன்ற விடயங்களிற்கு தீர்வு காணப்பட முடியாத நிலைதான் இருக்கும் ஏனெனில் தெற்கில் உள்ள எழுபது வீதமான சிங்கள மக்களின் வாக்குகளை சுவீகரிப்பதிலே இரு பிரதான கட்சிகளும் மிக கவனமாக இருக்கின்றது.

இந்த நான்கு வருடமும் அரசாங்கம் தமிழ் மக்களினை ஏமாற்றியதுடன், நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏமாற்றப்பட்டு இன்று இந்த அரசாங்கம் தங்களை ஏமாற்றி விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் பகிரங்க மன்னிப்பு கேட்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாக தோல்வி கண்டுள்ளது என்பதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் தெரிவித்திருப்பதன் ஊடாக தங்களது தோல்வியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.