போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ரணிலின் அரசே புத்துயிர் அளித்தது!

போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு ரணிலின் அரசே புத்துயிர் அளித்தது!

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதைப்பொருள் வர்த்தகத்திற்கு ரணிலின் அரசே மீண்டும் புத்துயிர் அளித்தது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரைச் சேர்ந்தவர்களுமே மறைமுகமாக உதவுகின்றார்கள்.

உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு பிரதமர் ரணிலின் அரசு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றது.

இவர்களின் இந்த செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தெரிந்த விடயம். போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராகவும் அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கும் சில அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக நடவடிக்கைளை எடுக்கவேண்டும்.

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு முடிவு கட்டப்பட்டிருந்தது.

ஆனால் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் மீண்டும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் பாதாள உலகக் குழுவினருக்கும் தாராளமாகச் சுதந்திரம் அளிக்கப்பட்டது” என விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.