வவுனியா, பழைய பேருந்து நிலைய பாதை புனரமைப்பு.

வவுனியா, பழைய பேருந்து நிலைய பாதை 20 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு.

வவுனியா, பழைய பேருந்து நிலையத்தின் ஊடாக பொது மலசலகூடத்திற்குச் செல்லும் பாதையின் சீரமைப்புப் பணிகளுக்காக கடந்த வருடம் 2018ஆம் ஆண்டின் நகரசபை நிதியிலிருந்து 20 இலட்சம் ரூபாவினை ஒதுக்கியுள்ளதுடன், பாதை புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றதாக நகரசபை உப நகர பிதா சு. குமாரசாமி தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிக்கு இன்று களப்பணிகளை மேற்பார்வை மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவி்க்கையில்,

பொது மலசல கூடத்திற்குச் செல்லும் போது மேல்பகுதியிலிருந்து சிறியளவிலான சீமெந்து துண்டுகள் உடைந்து தலையில் வீழ்ந்து வருவதாக வியாபார நிலைய உரிமையாளர்களினாலும், வர்த்தகர் சங்கத்தினாலும் நகரசபைக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து இதனைத் திருத்தும் பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த இரண்டு வருடங்கள் மூடப்பட்டிருந்தது. நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காத காரணத்தினால் சீரமைப்புப்பணிகள் இடம்பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நகரசபையின் கடந்த ஆண்டு நிதியிலிருந்து 20 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைக்கும் பணிகள் முழு வேகத்துடன் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இம்மாதம் இறுதிப்பகுதியில் பொது மலசலகூடத்திற்காக பொதுப்பாதை சீரமைக்கும் பணிகள் நிறைவுபெற்றுவிடும்.

இதனால், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் உட்பட இப்பகுதியிலுள்ள வியாபார நிலைய உரிமையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.