விக்னேஸ்வரனும் சிறீதரனும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களா?
தமிழ் மக்களால் நிராகாிக்கப்பட்டவா்களே இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக காண்பித்து போராட்டங்கள் செய்தார்கள் என்றால், சீ.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஆகியோர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களா என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினமான கடந்த 4ம் திகதி வடமாகாணத்தில் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என கூறி போராட்டங்களை நடாத்தினர்.
இது தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுதந்திர தினத்தை கரிநாளாக கொண்டாடியவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என கூறியிருந்தார்.
இது தொடர்பாக கருத்து கேட்டபோதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவா் கூறுகையில்,
மக்களால் நிரகரிக்கப்பட்டவர்களே போராட்டம் நடாத்தினார்கள் என்றால் சீ.வி.விக்னேஸ்வரன் மக்களால் நிராகாிக்கப்பட்டவரா?
அந்த போராட்டங்களில் ஒன்றில் நானும் கலந்து கொண்டேன். நான் மக்களால் நிராகரிக்கப்பட்டவனா? மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது அலுவலகத்திற்கு முன்னால் இடம் பெற்றதால் தானும் கலந்து கொண்டார் என சுமந்திரன் கூறியிருக்கின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அந்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயங்களை முன்வைத்து மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதை உறுதிப்படுத்த முடியுமா? அதனை சிறீதரன் கூறுவாரா?
இத்தனைக்கும் மேல் சிறீதரன் மக்களால் நிராகாிக்கப்பட்ட ஒருவரா? என கேள்வி எழுப்பியதுடன், தமிழ் மக்கள் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இலங்கை அரசின் சுநத்திர தினத்தை எப்படி தமிழ் மக்கள் கொண்டாட முடியும்?
இலங்கையின் சுதந்திர தினத்தை புறக்கணிப்பதும், எதிர்ப்பதும் இன்று நேற்றல்ல தந்தை செல்வா காலம் தொடர்ந்து இருந்துவரும் ஒன்று. அதனை சுமந்திரன் அறிந்திருக்காவிட்டால் அதனை அவர் அறிந்து கொள்ளவேண்டும் என்றார்.
சகோதர படுகொலைகள் குறித்த ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியின் ஆவணம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,
ஈ.பி.ஆா்.எல்.எவ் கட்சியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான மாநாட்டின் போது வரலாறு சம்மந்தமான ஆவணம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கின்றது.
அது குறிப்பாக சகோதர படுகொலைகள் குறித்து பேசும் ஆவணமாக காணப்படுகின்றது.
ஆனால் அந்த விடயத்தினை மீள..மீள.. நினைவுபடுத்துவது தமிழ் மக்கள் மனங்களில் மாறாத வடுவை விதைக்கும் ஒரு செயலாகும்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது தமிழீ ழ விடுதலை புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனுடன் பேசும் சந்தர்ப்பத்தில் முன்னாள் ஆயுதப் போராட்ட இயங்களுடன் தமிழீழ விடுதலை புலிகள் ஒற்றுமைப்படுவதென்பது மறப்போம், மன்னிப்போம் என்பதன் அடிப்படையில் அமையவேண்டும் என கேட்டிருந்தோம்.
அதனை புலிகள் ஒப்புக் கொண்டார், அதை பின்பற்றினார்கள், அவ்வாறான நிலையில் மீளவும்.. மீளவும்.. அதை குறித்து பேசிக் கொண்டிருப்பது பயனற்ற ஒன்றாகும் என்றார்.