சி.வி.யின் ஆட்சேபனை மனு நிராகரிப்பு

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தாக்கல் செய்த அடிப்படை ஆட்சேபனை மனுவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தமக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து, சி.வி.விக்னேஸ்வரன் தாக்கல் செய்த அடிப்படை ஆட்சேபனை மனு மீதான வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த ஆட்சேபனை மனுவை நிராகரிப்பதாக நீதிபதிகளான குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அறிவித்தனர்.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், முன்னாள் முதலமைச்சரால் வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து முன்னாள் முதலமைச்சரின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி வட. மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார்.

அதன்படி டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி, டெனிஸ்வரன் மீண்டும் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.