அமைச்சரவையில் ரணிலின் முயற்சிக்கு மைத்திரி தடை!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அனுமதி கோரும் பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

எனினும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த முன்மொழிவு தொடர்பாக ஆராய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், இந்த ஆணைக்குழு தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை ஆராய கால அவகாசம் கோரியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய விவாதம் எதிர்வரும் மாதம் நடக்கவுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குறித்த ஆணைக்குழுவை அமைப்பதற்கு அனுமதி கோரியுள்ளார்.

இந்த ஆணைக்குழு முன்னிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தமது குற்றங்களை ஒப்புக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.

2015ஆம் ஆண்டிலும், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, உண்மை நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.