வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்ட வீதிப்பதாதைகளில் பல்வேறு முரண்பாடுகள்!

வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்ட வீதிப்பதாதைகளில் பல்வேறு முரண்பாடுகள்!

வவுனியாவில் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டு வரும் வீதிப்பதாதைகளில் தகவல்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை என பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அண்மைய காலங்களில் வவுனியா நகரங்களில் வீதி அதிகாரசபையினரால் வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வீதிப்பதாதைகளில் சில எழுத்துப்பிழைகள் காணப்படுகின்றமை தொடர்பில் அண்மையில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று வரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது வவுனியா – நெளுக்குளம் பகுதியில் வீதியில் பொருத்தப்பட்டுள்ள வீதிப்பதாதை ஒன்றில் வவுனியா நகர் 4.5 கிலோ மீற்றர் என்று குறிக்கப்பட்டுள்ளதுடன் ,அதற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டு காணப்படும் வீதி வீதிப்பதாதையில் 5 கிலோ மீற்றர் என்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தவறுகள் தெரிந்து இடம்பெறுகின்றதா அல்லது தெரியாமல் இடம்பெறுகின்றனவா? என்ற கேள்வியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதுடன் சுட்டிக்காட்டப்பட்டு வரும் தவறுகள் திருத்திக்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு வினவிய போது,

இதற்கு பதிலளிப்பதற்குரிய அதிகாரிகள் தற்போது அலுவலகத்தில் இல்லை எனவும் இவ்விடயம் சம்பந்தமாக உடனடி கவனத்திற்கு கொண்டுவந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.