இலங்கையுடனான இருதரப்பு உறவுககளை வலுப்படுத்த அமெரிக்கா ஆர்வம்!

இலங்கையுடனான இருதரப்பு உறவுககளை வலுப்படுத்த அமெரிக்கா ஆர்வம்!

இலங்கையின் அரசியல் குழப்பநிலையும், இனநெருக்கடியும் அமெரிக்கவுடனான இருதரப்பு உறவுகளுக்கு சவாலாக அமைகின்ற போதிலும் இலங்கையுடன் அமெரிக்கா தொடர்ந்தும் செயற்பட தயாராக இருப்பதாக அமெரிக்க உயர்மட்ட இராணுவத் தளபதியொருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸின் செனட் சபையில் ஆயதப்படைகள் குழுவின் விசாரணையின் போது, அமெரிக்கா இந்து – பசுபிக் கட்டளை பணியகத்தின் தலைவர் அட்மிரல் பிலிப் டேவிட்ஸன் இலங்கையுடனான அமெரிக்காவின் உறவு தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ” இந்தியப் பெருங்கடலில் இலங்கை குறிப்பிடத்தக்க மூலோபாய வாய்ப்பாக உள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையில், இராணுவ உறவுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

அரசியல் குழப்பம், மற்றும் சிங்கள, தமிழ் இனங்களுக்கிடையிலான பதற்ற நிலை என்பன, உறுதியற்ற தன்மை மற்றும், தடைகளை ஏற்படுத்தினாலும், தொடர்ந்தும் எமது ஒத்துழைப்பு வளர்ந்துள்ளது.

மேலும், சீனாவிடம் பெறப்பட்ட கடன்களுக்காக, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியுள்ளது. இது அனைத்துலக கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடல்சார் பாதுகாப்பு ஆற்றலைக் கட்டியெழுப்புதல், கடல்சார் அதிகார வரம்பு விழிப்புணர்வு, மனிதாபிமான உதவிகள், இடர் முகாமைத்துவம், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல், மருத்துவ உதவி, மற்றும் அமைதி காப்பு நடவடிக்கைகள் போன்றவற்றில், இலங்கை இராணுவத்துடன் இந்தோ- பசுபிக் கட்டளை பீடம், ஒத்துழைத்துச் செயற்படுகிறது.

அமெரிக்க – இலங்கை கடற்படைகளுக்கிடையிலான ஈடுபாடுகளை அதிகரிப்பதில், 2019 இல், இந்தோ- பசுபிக் கட்டளைப்பீடம் கவனம் செலுத்தவுள்ளது.

இலங்கை கடற்படை நன்கு பயிற்சி பெற்ற, தொழில்சார் படையாக, இந்தியப் பெருங்கடலில், பலதரப்பு கடல்சார் பரிமாற்றத்துக்கு பங்களிக்கும் வாய்ப்பைக் கொண்டுள்ளது.

இலங்கைக்கு கடந்த 2018 ஓகஸ்ட் மாதம் வழங்கப்பட்ட அமெரிக்க கடலோரக் காவல்படைக் கப்பலுக்கு மேலதிகமாக ஜப்பான், இந்தியா ஆகியன வழங்கிய கப்பல்களும், பிராந்திய கடல்சார் ஆதிக்க விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்வதற்கு இலங்கை கடற்படைக்கு பெரிய ஆற்றலைக் கொடுத்துள்ளது.

இலங்கையுடன், குறிப்பாக கடற்படையுடன் நிலையான ஈடுபாட்டை பேணுவதும், இலங்கை கடற்படையின் ஆற்றலை துரிதமாக வலுப்படுத்த, ஒத்த கருத்துடைய பங்காளர்களுடன், ஆற்றலைக் கட்டியெழுப்பும் பலதரப்பு அணுகுமுறையை உருவாக்குவதும் அவசியமானது.

பிராந்தியத்தில் மூலோபாய உட்கட்டமைப்புகளை அடைவதற்காக, சீனா அதிகரிக்கும் கடன் சுமையைப் பயன்படுத்திக் கொள்ளுகிறது.

சீனாவிடம் பெறப்பட்ட கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், இலங்கை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு 2017 டிசெம்பரில் சீனாவுக்கு வழங்கியுள்ளது.” எனவும் கூறினார்.