இலங்கையின் கடன்கள் பாரிய ஆபத்தை கொண்டுள்ளன – உலக வங்கி!

இலங்கையின் கடன்கள் பாரிய ஆபத்தை கொண்டுள்ளன – உலக வங்கி!

மத்திய அரசாங்கத்தின் கடன் மிகவும் உயர்வானதாக காணப்படுவதாகவும் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 83 சதவிகிதமாக இருக்கின்றது என்றும் தெற்காசிய பிராந்தியத்திற்கான உலக வங்கியின் துணைத் தலைவர் ஹார்ட்விக் ஸ்கேஃபர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக உயர் நடுத்தர வருமான நாடு என்ற நிலையை நோக்கி நகரும் இலங்கை, அதன் வர்த்தக அடிப்படையிலான முன்னேற்றத்திற்காக அதிகளவு செலவு மற்றும் ஆபத்துக்களை உள்ளடக்கிய கடன்களை பெறுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக வங்கியின் துணைத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஹார்ட்விக் ஸ்கேஃபர், தனது விஜயத்தின் ஓர் அங்கமாக மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியை சந்தித்தார்.

இதன் பின்னர் இன்று (வியாழக்கிழமை) நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அபிவிருத்தியில் இலங்கையின் தற்போதை நிலை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“வெளிநாட்டு நாணயங்களை அடிப்படையாக கொண்ட பெரும்பாலான கடன்கள் சர்வதேச இறையாண்மை பினைமுறிகல் மற்றும் இலங்கை அபிவிருத்தி பினைமுறிகல் ஆகியவற்றை உள்ளடக்கிய சந்தை கடன்களாக காணப்படுகின்றன.

இது 2017 இல் 53 சதவீதமாக காணப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் இது மூன்று வீதமாக காணப்பட்டது.

2019 முதல் 2023 மற்றும் 2025 முதல் 2028 வரையிலான காலப்பகுதியில் யுரோ பினைமுறிகல் திருப்பி செலுத்தப்படவேண்டிய முழுமையான தொகை 12.15 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இது இலங்கைக்கு புதிய விடயம், அத்தோடு இது இலங்கையை மீளசெலுத்தும் நெருக்கடிக்குள் சிக்கவைக்கலாம். இருப்பினும் இதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது.

மேலும் இந்த ஆபத்துகளை தவிர்ப்பதற்கான திட்டங்களை வடிவமைத்துள்ளது. எனினும் முக்கிய சீர்திருத்தங்கள் மந்த கதியில் முன்னெடுக்கப்படுவது கரிசனைக்குரிய விடயமாக உள்ளது.” என கூறியுள்ளார்.