வறுமை ஒழிப்பு செயற்பாட்டில் இலங்கை முன்னேற்றம்!

வறுமை ஒழிப்பு செயற்பாட்டில் இலங்கை முன்னேற்றம்!

வறுமை ஒழிப்பு செயற்பாட்டில் இலங்கை வியத்தகு முன்னேற்றம் கண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் துணைத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்காசிய பிராந்தியத்திற்கான உலக வங்கியின் துணைத் தலைவர் ஹார்ட்விக் ஸ்கேஃபர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனது விஜயம் குறித்து மேலும் தெரிவித்த அவர்,

”உலக வங்கியின் துணைத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளேன்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளேன். அக்காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தற்போது வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

உலக வங்கி கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையுடன் வலுவான உறவை பேணி வருகிறது. 2007ஆம் ஆண்டில் 15 வீதமாக காணப்பட்ட வறுமை வீதத்தை இலங்கை 2016ஆம் ஆண்டு வெறும் 4 வீதமாக குறைத்துள்ளது.

தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு என்பது தெற்காசியாவில், குறிப்பாக இலங்கையில் முக்கிய பிரச்சினையாக விளங்குகிறது. எனவே, தொழில் முயற்சிகளிலும், வேலைவாய்ப்புகளிலும் அதிகளவில் பெண்களை ஈடுபடுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.