தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிரம்மாண்ட கூட்டணி!

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிரம்மாண்ட கூட்டணி!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட பிரம்மாண்ட கூட்டணி அமைத்து வருவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, ஈரோடில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களையும் உதவிகளையும் செய்து வருகிறது.

பிரதமர் மோடி தொடர்ந்து தமிழகத்துக்கு வந்து பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துவைத்துள்ளார்.

அந்தவகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, திருப்பூரில் மெட்ரோ ரயில் திட்டம், ஈ.எஸ்.ஐ. வைத்தியசாலைத் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

பிரதமரைத் தொடர்ந்து பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவும் ஈரோடு வரவுள்ளார். தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் தமிழகத்துக்கு வரவுள்ளனர்.

இதேவேளை, தமிழக முதல்வரும் மக்களுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். தற்போது நாம் கூட்டணி பற்றி பேசி வருகிறோம். விரைவில் நல்ல முடிவு வரும்.

எங்களுக்கு பொதுவான எதிரி தி.மு.க.வும் காங்கிரஸூம் தான். தமிழகத்தை பொறுத்தவரை பலமான பிரமாண்டமான கூட்டணி அமைத்து வருகிறோம். தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்று அவர் தெரிவித்தார்.