‘சிக்ஸர் மன்னன்’ கிறிஸ் கெய்ல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு!

விண்டிஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல், எதிர்வரும் உலகக்கிண்ண தொடருக்கு பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறபோவதாக அறிவித்துள்ளார்.

39 வயதான கிறிஸ் கெய்ல், தனது ஓய்வு குறித்து கூறிய கருத்துக்கள் இவை, நான் ஓய்வு பெறுவதனால் இளம் வீரர்களுக்கு விண்டிஸ் அணியில் ஜொலிக்கும் ஒரு சந்தர்ப்பம் உருவாக்கப்படும்.

இதனால் நான் இங்கிலாந்தில் மே முதல் ஜூலை மாதம் வரை நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஒருநாள் உலகக்கிண்ண தொடருக்கு பின் ஓய்வு பெற உள்ளேன்’ என கூறியுள்ளார்.

1999ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான கிறிஸ் கெய்ல், இதுவரை 284 போட்டிகளில் விளையாடி ஒரு இரட்டை சதம், 23 சதங்கள், 49 அரைசதங்கள் அடங்களாக 9727 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதேபோல, 2000ஆம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கிறிஸ் கெய்ல், இதுவரை 103 போட்டிகளில் விளையாடி 3 இரட்டை சதங்கள், 15 சதங்கள், 37 அரைசதங்கள் அடங்களாக 7215 ஓட்டங்களை குவித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலேயே அதிரடி காட்டி வந்த கெய்ல், ரி-20 போட்டிகளில் அறிமுகமான பிறகு தனக்கென தனித்துவமான துடுப்பாட்டத்தை கையாண்டார்.

2006ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான ரி-20 போட்டியில் அறிமுகமான கெய்ல், இதுவரை 56 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 13 அரைசதங்கள் அடங்களாக 1607 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இவ்வாறு மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் கைதேர்ந்த கெய்ல், பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

கிறிஸ் கெய்ல் தான், விண்டிஸ் அணி சார்பில் ரி-20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராகவுள்ளார். அதேபோல ஐந்தாவது உலகக்கிண்ண தொடரில் விளையாடும் என்ற வீரர் என்ற பெருமையும் அவரை சாரும்.

அத்தோடு, விண்டிஸ்; அணிக்காக ஒருநாள் போட்டிகளில் முதற்தடவையாக இரட்டைச்சதம் அடித்த துடுப்பாட்ட வீரராகவும் கெய்ல் இருக்கின்றார்.

மேலும், ஒருநாள் போட்டிகளில் 9727 ஓட்டங்களை குவித்துள்ள கெய்ல், விண்டிஸ் அணி சார்பில், அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

பத்தாயிரம் ஓட்டங்களை தொட கெய்லுக்கு இன்னும் 273 ஓட்டங்கள் தேவையாகும். முதலாவது இடத்தில் உள்ள ஜாம்பவான் பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்க இன்னும் 677 ஓட்டங்கள் கெய்லுக்கு தேவைப்படுகிறது.

இந்த இரண்டு சாதனைகளில் ஒன்றை அவர் உலகக்கிண்ண தொடரில் முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொந்த நாடு என மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் நடைபெறும் ரி-20 லீக் தொடர்களிலும் விளையாடி பல இலட்சணக்கான இரசிகர்களை தன்பால் ஈர்த்துள்ள கெய்லை, எதிர்வரும் உலகக்கிண்ண தொடருக்கு பின்னர் இரசிகர்கள் நிச்சயம் காணமுடியாது வருத்தப்படுவார்கள்.

உலகக்கிண்ண தொடர், எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுளமை குறிப்பிடத்தக்கது.