வடக்கு கிழக்கில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு முஸ்லிம் பேரவையும் ஆதரவு

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்த்தாலுக்கு யாழ்.முஸ்லிம் மக்களும் ஆதரவு வழங்குகின்றனர்.

இந்த ஆதரவை வழங்குவதாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி முஸ்லிம் பேரவை (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் எமது மக்களுக்கான தீர்வு கிடைக்கப்பெற வேண்டும் என்ற அடிப்படையில் இப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாக இப்பேரவை குறிப்பிட்டுள்ளது.

பேரைவை குறிப்பிடுகையில், “யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் முடிவடைகின்ற இத்தருணத்திலும், இராணுவத்தினரிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டவர்கள் மற்றும் வேறு ஆயுதக் குழுக்களினால் கைது செய்யப்பட்டவர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது இதுவரை யாராலும் உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படாத நிலையில் இலங்கை அரசாங்கமும் இது குறித்து காத்திரமான எவ்வித முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் அமைப்பு பல மாதங்களாக நடத்திவரும் சத்தியாக்கிரகப் போராட்டங்களும் உரிய தரப்பினரால் கண்டுகொள்ளப்படவில்லை.

எனவே குறித்த அமைப்பினரால், முழு மாகாணம் தழுவிய ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இப்போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்களும் ஆதரவு வழங்குவது என்ற தீர்மானம் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.