காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்.

கிளிநொச்சியில் இன்று(25) மேற்கொள்ளப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் அரசியல் கட்சி ஒன்றின் கறுப்பு சட்டை குழுவினரால் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை குறித்த குழுவினர் எமது அறிவித்தல்களுக்கும் கட்டுப்படாது. அடாவடிகளில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். குறித்த குழுவினரிடம் அமைதியாக ஒரு பக்கமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான அம்மாக்களை முன்னே விட்டு பின்னால் அமைதியாக வருமாறு அருட்தந்தையர்கள் மன்றாட்டமாக கோரிய போதும் அவர்கள் அதனை கருத்தில் எடுக்கவில்லை.

அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரையும் குறித்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிய நிலையில் அனைவரும் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

ஆனால் இக் குழுவினர் அவர்களை சீண்டும் வகையிலும் அவர்களுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறும் செயற்ப்பட்டனர்.

அத்தோடு முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இருந்து வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். அநாகரீகமான வார்த்தை பிரயோகங்களையும் பயன்படுத்தி பேசியிருந்தனர்.

மேலும் அறிவிப்பு செய்யப்பட்ட முச்சக்கர வண்டியில் கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பைச் சேர்ந்த கனகரஞ்சனி மற்றும் லீலாதேவி ஆகியோர் மக்களை வழிநடத்தி சென்றதோடு கோசங்களை எழுப்பியவாறும் இருந்தனர்.

இதன் போது இவர்கள் வேண்டாம் வேண்டாம் ஓஎம்பி வேண்டாம் என கோசம் எழுப்பிய போது கரைச்சி பிரதேச சபையின் தமிழரசு கட்சியின் உறுப்பினர் சத்தியானந்தன் அதனை தடுத்து நிறுத்துமாறும், ஓஎம்பி வேண்டும் வேண்டும் என கோசம் எழுப்புமாறு அறிவித்திருந்தார்

இதனை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்க மறுத்த போது ஒலி பெருக்கியின் வயர்களை அறுக்க முற்பட்டுள்ளார். அத்தோடு பல்கலைகழக மாணவன் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் ரெலே உறுப்பினர் மதுசுதன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு உணவு மற்றும் குடிபானம் வழங்குவதனையும் குறித்த குழுவினர் இடையூறு விளைவித்துள்ளனர்.