முகாமைத்துவ உதவியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்திற்கு அழைப்பு

முகாமைத்துவ உதவியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்திற்கு அழைப்பு

முகாமைத்துவ உதவியாளர் சேவையின் 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதன் அவசியத்தை வலியுறுத்தி போராட்டமொன்றினை முன்னெடுப்பதற்கு துண்டுப்பிரசுரம் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் நாளை (புதன்கிழமை) கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உரிமைகளை வென்றெடுக்க ஒரு நாள்’ எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த போராட்டம் அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில் குறித்த போராட்டத்திற்காக அரசாங்க முகாமைத்துவ உதவியாளர்கள் நாளைய தினம் சுகயீன விடுமுறையை பெற்று பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு, போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோரிற்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினையும் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.