த.தே.கூட்டமைப்புக்கு எதிரான அணியில் நாமும் பங்களிப்போம்!

sdr

த.தே.கூட்டமைப்புக்கு எதிரான அணியில் நாமும் பங்களிப்போம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அணியை உருவாக்குவதற்கு தமது பங்களிப்பும் இருக்கும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ச.அரவிந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அடிப்படைக் கொள்கையில் இருந்து விலகிச் சென்று பல வருடங்களாகி விட்டது.

திரும்பி அவர்கள் மக்களுடைய பிரச்சினைகள் நிலைப்பாடுகளை கருத்திற்கொண்டு செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் இல்லை. கூட்டமைப்பினருடன் சேர்ந்து செயற்படக் கூடிய எண்ணமும் எம்மிடம் இல்லை.

மோசடி செய்யக் கூடிய நிலையில் தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள் என்றால் அது மிகவும் மனவருத்தத்துக்குரியது.

இந்நிலையில் அரசியல் குழப்ப சூழலில் தமிழ் மக்கள் இருக்குபோது அவர்களை சரியான வழியில் கொண்டுசெல்லும் பொறுப்பு எங்களிடம் இருக்கிறது.

இன்று உடனடியாக தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகளைக் கூட அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செய்யத் தவறியது மிகவும் மோசமான நிலை.

யுத்த சூழ்நிலையில் இருந்த மக்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் தலைமைக்கு இருந்தும் அந்தப் பொறுப்பிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலகி நிற்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.