நல்லாட்சியை அனைவரும் வெறுக்கத் தொடங்கியுள்ளனர்!

நல்லாட்சியை அனைவரும் வெறுக்கத் தொடங்கியுள்ளனர்!

நல்லாட்சியைக் கொண்டு வந்த அனைவரும் அரசாங்கத்தை வெறுத்துள்ளதுடன்,அதனை விமர்சிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே, மஹிந்தானந்த அளுத்கமகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2015, ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கம் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட தெரிவித்துள்ளார்.

அவர் மட்டுமன்றி முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய அமைச்சர்கள் என அனைவரும் இந்த அரசாங்கத்தை விமர்சிக்க தற்போது ஆரம்பித்துள்ளார்கள்.

இதிலிருதே இது மக்கள் விரோதமான அரசாங்கம் என்பது நன்றாகத் தெரிகிறது. அரச சொத்துக்களை விற்பனை செய்வது, தேர்தலை பிற்போட்டுக் கொண்டிருப்பது, வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளமை என பல்வேறு சவால்கள் எம்முன்னால் இருக்கின்றன.

இந்தநிலையிலேயே, நாம் இதற்கொதிராக போராட்டம் நடத்த நாம் தீர்மானித்துள்ளோம்.

இதற்கு கண்டியிலிருக்கும் அனைவரும் கலந்து கொண்டு, இதனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றுவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

இதனை நாம் மார்ச் மாதத்துடன் நிறுத்திக்கொள்ள மாட்டோம். அந்தவகையில், டிசம்பர் மாதம் வரை 10 போராட்டங்களை நடத்த நாம் தினங்களை குறித்துள்ளோம்.

இறுதிப் போராட்டமானது, கதிர்காமத்திலிருந்து கொழும்பு வரையான பேரணியாக இடம்பெறவுள்ளது.

பொறுத்தது போதும் என்ற தொனியிலான இந்தப் போராட்டமானது, அரசாங்கத்தை வெளியேற்றும் முக்கியமான போராட்டமாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை” என மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.