அபிநந்தனை விட மோடிக்கு பொதுக்கூட்டம் அவசியமா?

அபிநந்தனை விட மோடிக்கு பொதுக்கூட்டம் அவசியமா?

விடுவிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை வரவேற்காமல் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாகிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார். மாவீரனான அவரை வரவேற்காமல் மோடி பொதுக்கூட்டங்களில் பேசிக் கொண்டு இருக்கிறார்.

சவுதி அரேபிய இளவரசரை வரவேற்கச் செல்லும் அவருக்கு அபிநந்தனை வரவேற்க நேரம் இல்லையா? இதுதான் மோடியின் தேசப் பக்தியா? அவர் அபிநந்தனை வரவேற்று இருந்தால் நாடே பெருமைப்பட்டு இருக்கும்.

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலை வைத்து மோடி அரசியல் ஆதாயம் பெற முயற்சி செய்கிறார்.

நாட்டின் ஹீரோ திரும்ப வரும்போது மோடி பொதுக்கூட்டங்களில் பேசிக் கொண்டிருப்பது நல்லதொரு விடயமல்ல” என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.