சுகபோகமாக வாழும் அரசியல்வாதிகளுக்கு மக்களின் துயர் தெரிவதில்லை!

சுகபோகமாக வாழும் அரசியல்வாதிகளுக்கு மக்களின் துயர் தெரிவதில்லை!

மக்களின் உழைப்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அரசியல்வாதிகள் அவர்களின் துயரத்தை நீக்குவதற்கு முன்வருவதில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையிலுள்ள விவசாயிகள், எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே நாமல் கருணாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நெற்செடியிலுள்ள மணிகளை வெளியில் காணும்போது மிகவும் செழிப்பாக காணப்படும். ஆனால் அதில் சிலவேளை ஒன்றும் இருப்பதில்லை. அதேபோன்றுதான் அரசியல்வாதிகளும் ஆகும்.

மேலும் மக்கள் பிரதிநிதிகள் அழகாக ஆடையணித்து, உயர் ரக வாகனங்களில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பயணங்களை மேற்கொள்வதுடன் தங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்கின்றனர். இவர்கள் மக்களை பற்றி கவலைகொள்வதில்லை.

அந்தவகையில் நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கிய பங்காற்றும் விவசாயிகள், தங்களது விவசாயத்தின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி அரசியல்வாதிகள் கண்டுகொள்வதில்லை.

நாடாளுமன்றத்தில் அநாவசிய விடயங்கள் பற்றி பேசுகின்றனர். ஆனால் விவசாயிகள் பற்றி எவரும் பேசுவதில்லை.

விவசாயிகளின் ஊடாகவே நாட்டின் வளர்ச்சியுள்ளது. ஆகையால் அதனை உணர்ந்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளை அரசு செய்ய வேண்டும்.

மேலும் விவசாயத்தை அபிவிருத்தி செய்ய புதிய செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.