இலங்கை தொடர்பாக ஆராய விசேட அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்!

இலங்கை தொடர்பாக ஆராய விசேட அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்!

இலங்கை தொடர்பாக ஆராய ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை, விசேட அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு குறித்த விசேட நபர், ஐ.நா. ஆணையாளருக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை அந்த அறிக்கையினை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள யாழ்பாடி விடுதியில் இன்று (சனிக்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின்போதே ஐ.நா. ஆணையாளரிடம் கையளிப்பதற்காக தாம் மாதிரி அறிக்கை ஒன்றை தயாரித்து தமிழரசுக்கட்சியிடம் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

குறித்த அறிக்கையில் மூன்று கோரிக்கைகளை உள்ளடக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த அறிக்கையில் தமிழ் அரசியல் தலைவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு ஐ.நா. ஆணையாளரிடம் நேரடியாக வழங்கப்படவுள்ளதோடு, அதன் பிரதிகள் பல தரப்பினருக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.