கோத்தபாய தரப்பால் மகிந்த தரப்புக்கு அச்சுறுத்தல்!

கோத்தபாய தரப்பால் மகிந்த தரப்புக்கு அச்சுறுத்தல்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்ற பின்னணியில், கோத்தபாய ராஜபக்ச தரப்பினரால் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தரப்பை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பகிரங்கமாக இந்த அச்சுறுத்தலை விடுத்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக கொண்டு வரப்படும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க யோசனைக்கு தமது தரப்பினர் ஆதரவளித்தால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் இருந்து விலக தயாராக இருப்பதாக விமல் வீரவங்ச, இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கூறியிருந்தார்.

இதனிடையே சிங்கள அமைப்புகள் மூலம் மகிந்த ராஜபக்ச தரப்பினருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கும் யோசனைக்கு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆதரவளிக்கக் கூடாது என சிங்கள இனவாத அமைப்புகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் மற்றும் உலக இலங்கை பேரவை ஆகியன அறிக்கைகளை வெளியிட்டுள்ளதுடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படுவதை தாம் எதிர்ப்பதாக இந்த அமைப்புகள் கூறியுள்ளன.

அத்துடன் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் கடும் முயற்சியில் இந்த சிங்கள தேசிய அமைப்புகள் ஈடுபட்டு வருவதாக பேசப்படுகிறது.

இதன் பின்னணியில் கோத்தபாய ராஜபக்ச இருப்பதாக கூறப்படுகிறது. விமல் வீரவங்ச அல்லது உதய கம்மன்பில ஆகியோர் தவறுதலாகவேனும் மகிந்த ராஜபக்சவை விமர்சிக்க கூடாது எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை கோத்தபாய ராஜபக்சவின் நேரடி அனுமதியின் பேரிலேயே இவர்கள், பசில் ராஜபக்சவை அரசியல் ரீதியாக கடுமையாக விமர்சித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.