திருக்கேதீஸ்வர வளைவு விவகாரம் – நீதிமன்ற தீர்ப்பு வெளியானது.

திருக்கேதீஸ்வர வளைவு விவகாரம் – நீதிமன்ற தீர்ப்பு வெளியானது.

திருக்கேதீஸ்வரம் கோயில் வீதி வளைவை, தற்காலிகமாக 4 நாட்களுக்கு பொருத்துமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மஹா சிவராத்திரி விரத தினத்தை முன்னிட்டு திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் அமைக்கப்பட்ட வளைவு சகோதர மதத்தைச் சேர்ந்த சிலரினால் உடைத்து நொறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விடயம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், சிவராத்திரி உற்சவம் நடைபெற வேண்டிய அவசரம் கருதி, இன்றைய தினம் விடுமுறை என்பதால் நாளை வரை காத்திருக்காமல், இவ்வழக்கை நீதவானின் இல்லத்துக்குக் கொண்டு செல்லுமாறு, மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு இன்று காலை தான் அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.

அதன் அடிப்படையிலேயே, குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்துள்ளதோடு, சம்பவம் தொடர்பான காணொளியும் வெளியாகியுள்ளது.

அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டதாகவும் அமைச்சர் மனோ கணேசன் ஆதவன் செய்தி சேவைக்கு தெரிவித்தார்.