திருக்கேதீஸ்வர வளைவு விவகாரம் கவலையளிக்கின்றது! யாழ் குரு முதல்வர்!

திருக்கேதீஸ்வர வளைவு விவகாரம் கவலையளிக்கின்றது – யாழ் குரு முதல்வர்!

திருக்கேதீஸ்வர வளைவு விவகாரம் கவலையளிப்பதாக யாழ் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.

யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ப. யோ. ஜெபரட்ணத்தின் கையொப்பத்துடன் இன்று(திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கவலை வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“எமது இந்து மத சகோதரர்களின் மிகவும் பழமைவாய்ந்த, சரித்திரப் பிரசித்திபெற்ற திருத்தலமாக விளங்குகின்ற திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த வளைவு ஒரு கத்தோலிக்க குருவின் வழிகாட்டலில் கத்தோலிக்க மக்களால் சேதமாக்கப்பட்ட நிகழ்வு பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகள் எமக்கு ஆழ்ந்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

கத்தோலிக்கர் என்ற வகையில் நாம் வெட்கித் தலைகுனிவதோடு எமது வன்மையான கண்டணத்தையும் தெரிவிக்கின்றோம்.

தமது சிவராத்திரி விழாவை அனுஷ்டிக்கும் தருணத்தில் நடந்த இத்தகாத நிகழ்வினால் மனமுடைந்து காணப்படும் இந்து மத சகோதரர்களுக்கு எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றோம்.

எல்லா மதங்களையும், மதத்தவர்களளையும் அன்பு செய்யவேண்டும், மதிக்கவேண்டும் என்றுதான் கத்தோலிக்க திரு அவை எமக்கு போதிக்கிறது.

இந்நிலையில் இச்செயலை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. தமிழர்களாகிய நாம் மதவேறுபாடுகளின்றி சகோதரத்துவத்தில் வளரவேண்டியது மிகவும் இன்றியமையாததாக இருக்கும் இந்நிலையில் இப்படியான வேண்டத்தகாத நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாது இருக்கவும், நடைபெற்ற செயலுக்கு பிராயச்சித்தம் செய்யவும் சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டுமென்று வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம்.

இயேசுவின் வாழ்வாலும் போதனையாலும் நாம் பெற்றுக்கொண்ட அன்பு, மன்னிப்பு, விட்டுக்கொடுப்பு, தியாகம், புரிந்துணர்வு, சகோதரத்துவம், குழுமவாழ்வு ஆகிய எமது கத்தோலிக்க மதத்தின் அடையாளங்களை நாம் இழந்துவிடாமல் பாதுகாப்போம்.

இப்படியான நிகழ்வுகளால் எமது கத்தோலிக்க மதத்தின் பரிசுத்த தனத்துக்கு ஏற்படும் களங்கங்களுக்காக நாம் மனம் வருந்தி பிராயச்சித்தம் செய்யவேண்டும்.

தவிர்க்கமுடியாத காரணங்களால் மதங்களுக்கிடையே அவ்வப்போது ஏதாவது கருத்துவேறுபாடுகள் ஏற்படும் பட்சத்தில் ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகள் மூலமாக அவற்றை தீர்த்துவைக்க முயற்சிசெய்யவேண்டுமேயொழிய வன்முறைகளிலும், அடாவடித்தனங்களிலும் ஈடுபடவே கூடாது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.