போர் குற்றங்களை விசாரிப்பது பாரதூரமான செயல்!

போர் குற்றங்களை விசாரிப்பது பாரதூரமான செயல் என்கிறார் திஸ்ஸ!

ஐ.நா.வின் விசேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அழைத்து போர் குற்றங்களை விசாரிப்பது பாரதுரமான செயல் என சோசலிச மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் பிரதநிதி திஸ்ஸ விதாரண இதனை நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் வடக்கில் 5 தமிழ் கட்சிகள் கூட்டம் ஒன்றை நடத்தின. அதில் போர் குற்றங்களை விசாரிக்க ஐ.நா.பிரதிநிதி ஒருவரை நாட்டுக்கு அழைப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனையை அவர்கள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கவுள்ளனர். அவர்களின் இந்த நடவடிக்கை நாட்டுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஐ.நாவுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் இருப்பதாகவும், அரசியல் கைதிகளை விடுவிக்காதிருப்பது தொடர்பாகவும் விக்னேஸ்வரன் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அதில் சில உண்மைகளும் காணப்படுகின்றன. ஆகவே இவற்றுக்கு அரசாங்கத்தால் பதில் வழங்க முடியும்.

பிள்ளையானை பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி சிறையில் அடைத்திருப்பதும் அரசாங்கத்தின் செயற்பாடாகும். மேலும் இராணுவத்துடன் உள்ள காணிகளுக்கு நட்டஈடு வழங்கினால் மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல தயாராகவுள்ளனர்.

இவ்வாறான விடயங்களை உள்நாட்டுக்குள்ளேயே தீர்க்க முடியும். இதற்கு ஜெனீவாவின் விசேட பிரதிநிதி ஒருவர் அவசியம் இல்லை. நாட்டை இரண்டாக பிரிப்பதற்கே இந்த செயற்பாடு நடைபெறுகின்றது.

புலம்பெயர்ந்தோர் சார்பில் பிரித்தானியாவில் செயற்பட்ட இமானுவேல் என்ற பாதிரியார் தற்போது யாழில் உள்ளார். அவருக்கும், விக்னேஸ்வரனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

அரசாங்கம் ஆறு மாதங்களுக்குள் தேசிய பிரச்சினையை தீர்ப்பதாக கூறியது. ஆனால் அதனை செய்யவில்லை.

தற்போது மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் சார்பில் யாரையும் அனுப்பாமல் இருக்க எடுத்த முடிவு பிரித்தானியாவிற்கு ஏற்றவகையில் செயற்பட வழிவகுத்துள்ளது. அமெரிக்காவே இதன் பின்னால் இருந்து செயற்படுகின்றது” என கூறினார்.