திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி!

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி!

திருகோணமலை – முதலியார் குளம் பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இச்சம்பவத்தில் திருகோணமலை, இலிங்கனகர் பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய கண்மணி சிறீஸ்கந்தராஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் வயலானது முதலியார் குளப் பகுதியில் உள்ளதாகவும் அங்கு சில சந்தர்ப்பங்களில் அவர் தங்குவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை அப்பகுதியிலுள்ள வயல் நிலத்துக்குள் யானையொன்று அத்துமீறி நுழைந்துள்ளது, அதனை விரட்டுவதற்காக அந்நிலத்தின் உரிமையாளர்கள் பட்டாசு கொளுத்தி விரட்டியுள்ளனர்.

இதன்போது அந்த யானை அவ்விடத்திலிருந்து தப்பிச்செல்வதற்காக வீட்டின் வாசல்கதவை உடைத்துக்கொண்டு வளவிற்குள் வந்து அவ்விடத்தில் இருந்தவரை தாக்கி விட்டுச் சென்றுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரை, வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லும்போது வழியிலேயே உயிரிழந்து விட்டதாக அயலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.