மத முரண்பாடுகள் மூலம் சர்வதேசத்தை திசை திருப்ப முயற்சியா?

மத முரண்பாடுகள் மூலம் சர்வதேசத்தை திசை திருப்ப முயற்சியா?

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், திருக்கேதீஸ்வரம் பகுதியில் இடம்பெற்ற சம்பவம், சர்வதேசத்தை திசை திருப்பும் முயற்சியா என புரட்சிகர விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர்,

“அண்மையில் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டைக்கொண்டு எம்மை பிளவுபடுத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கக்கூடாது.

ஒடுக்கப்பட்ட தேசிய இனமான தமிழ்த் தேசிய இனத்தினராகிய எம்மை பலவழிகளிலும் பிரித்தாள்வதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

எமது உரிமைப் போராட்டத்தை வென்றெடுப்பதற்கும் எமக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் நாம் சாதி, மத பேதங்களைக் கடந்து ஐக்கியத்துடன் பயணிக்க வேண்டும்.

நாம் ஒன்றிணைவதன் மூலம் எம்மைப் பிரித்தாள முயற்சிக்கும் சக்திகளைத் தோல்வியடையச்செய்ய முடியும்.

ஆகவே எமது மக்கள் அனைவரும் மிகவும் விழிப்புடன் இருந்து சிறு சிறு பிணக்குகளில் முரண்பட்டு நிற்காது, சகிப்புத் தன்மையுடனும் விட்டுக்கொடுப்புடனும் பிரச்சினைகளை அணுகுவதற்கு முயற்சிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.