இந்துக்களைத் தரக்குறைவாக பேசிய அமைச்சரை பாகிஸ்தான் பதவி நீக்கம்.

இந்துக்களைத் தரக்குறைவாக பேசிய அமைச்சரை பாகிஸ்தான் அரசாங்கம் பதவி நீக்கம்.

பஞ்சாப் மாகாண தகவல் மற்றும் கலாசார துறை அமைச்சராக இருந்து ஃபாயஸ் உல் ஹாசன் சோஹன் என்பவரே இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பதவி நீக்கத்தை பஞ்சாப் மாநில முதல்வரின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பஞ்சாப் மாநில முதல்வரின் செய்தித் தொடர்பாளர்,

“இந்நிகழ்வு துரதிருஷ்டவசமானது. சோஹன் சொன்ன கருத்தில் இருந்து பஞ்சாப் அரசு விலகி நிற்கிறது. அது பஞ்சாப் அரசின் கருத்தல்ல.

இந்துக்கள் உட்பட எந்த சிறுபான்மையினரையும் அவமதிக்கும், புண்படுத்தும் கருத்துக்களையோ செயல்களையோ, பஞ்சாப் அரசு அனுமதிக்காது என முதலமைச்சர் கூறியதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இப் பதவி நீக்கத்தை பாகிஸ்தான் ஆளும் கட்சியான தெஹ்ரீக் – இ – இன்சாஃப்பின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

இதேவேளை, பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் – இ – இன்சாஃப் கட்சி பாகிஸ்தானிலும், பஞ்சாப் மாகாணத்திலும் ஆளும் கட்சியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.