யாழில் தலைமறைவாகியிருந்த ஆவா குழுவின் உறுப்பினர் வாள்களுடன் சிக்கினார்!

யாழில் தலைமறைவாகியிருந்த ஆவா குழுவின் உறுப்பினர் இன்று வாள்களுடன் சிக்கினார்!

யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கடந்த ஒரு வருடமாக தேடப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை தனங்கிளப்பு பகுதியில் வைத்து வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தலைமறைவாகியிருந்த இந்த சந்தேகநபரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஆவா குழுவில் செயற்பட்ட இந்த சந்தேகநபர், மானிப்பாய் தனுறொக் என்பவர் மற்றும் அவருடன் தொடர்பு உடையவர்களின் வீடுகளைத் தாக்கி வந்த கும்பலை சேர்ந்தவர் எனவும், கடந்த ஆண்டு மருதனார்மடம் பகுதியில் சுன்னாகம் பொலிஸாரால் வாள்களுடன் கைது செய்யப்பட்ட கும்பலில் இருந்து தப்பியவர் எனவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாகியிருந்த இந்த சந்தேகநபர் தனங்களப்பு பகுதியிலுள்ள வீட்டில் மறைந்திருப்பதாக யாழ்ப்பாணம் சிறப்புக்குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் அந்தப் பிரிவுக்குப் பொறுப்பான ரஞ்சன் எதிரிசிங்க தலைமையிலானஅணியினர் நேற்று நள்ளிரவு சந்தேகநபர் மறைந்திருந்த வீட்டை சுற்றிவளைத்தனர்.

பொலிஸார் சுற்றிவளைத்ததை அறிந்த சந்தேகநபர் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்த போதும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து வாள்கள் இரண்டு, முகமூடி கப்புகள் மூன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சாவகச்சேரி, சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் தலா 2 குற்றச்செயல்களிலும் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் 3 குற்றச்செயல்களிலும் சந்தேகநபருக்கு எதிராக வழக்குகள் உள்ளன.

விசாரணைகளின் பின் சந்தேகநபர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸார் சந்தேகநபருக்கு அடைக்கலம்

இதேவேளை, சாவகச்சேரி பொலிஸாரால் சந்தேநபர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்ட வாள்களை நீதிமன்றில் சமர்ப்பிக்காமல் அவரை பிணையில் விடுவிப்பதற்காக சாவகச்சேரி பொலிஸாரால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேகநபர் கைது செய்யப்படாமல் மறைந்திருப்பதற்கு சாவகச்சேரி பொலிஸார் உதவியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனாலேயே யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிலுள்ள தனங்களப்புக்கு சென்று சந்தேநபரை கைது செய்துள்ளதாக தெரியவருகிறது என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.