தேர்தலில் வெற்றிபெற சிறுபான்மையினரின் ஆதரவு தேவையில்லை!

தேர்தலில் வெற்றிபெற சிறுபான்மையினரின் ஆதரவு தேவையில்லை!

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு சிறுபான்மையினரின் ஆதரவு தேவையில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபதித் தேர்தலில் எம்மால் வெற்றிபெற முடியும். இதற்கு சிறுபான்மையினரின் – குறிப்பாக தமிழர்களின் ஆதரவுதான் அவசியமென்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

எம்மால் சிங்களப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைக்க முடியம். 2010இல் மகிந்த ராஜபக்ஷ, தமிழர்களின் ஆதரவு இல்லாமல், 1.8 மில்லியன் வாக்குகளால் வெற்றி பெற்றிருந்தார்.

ஆனால், 2015இல் அவர் தோல்வியடைந்தமைக்கு, தமிழ், முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்காதது காரணமல்ல. கொழும்பு, கம்பகா போன்ற மாவட்டங்களில் உள்ள நகரப்பகுதிகளில் உள்ள நடுத்தர மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. அதனால் 449,000 வாக்குகளால் மாத்திரமே அவர் தோல்வியடைந்தார்.

இதேவேளை, அந்த சாதகமற்ற சூழ்நிலையில் கூட மகிந்த ராஜபக்ஷவுக்கு, வடக்கில் 1 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்களின் வாக்குகள் கிடைத்திருந்தமையும் அனைவரும் அறிந்த விடயமாகும்” என கோட்டாபய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டிருந்தார்.