பாதாள உலகத்தினரின் செயற்பாடுகள் முடக்கப்படும்!

பாதாள உலகத்தினரின் செயற்பாடுகள் முடக்கப்படும்!

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாதாள உலகத்தினருக்கும் நாட்டில் தனியானதொரு அரசாங்கத்தை நடத்த இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாகாண ஆளுநர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே ஜனாதிபதி கடும் தொனியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி,

போதைப்பொருட்களிலிருந்து இளம் தலைமுறையினரை பாதுகாப்பதற்காக எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘சுஜாத தருவோ’ எனப்படும் ‘கண்ணியமான பிள்ளைகள்’ நிகழ்ச்சித்திட்டம் குறித்து தெளிவுபடுத்தினார்.

ஏப்ரல் 03ஆம் திகதி முதல் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு, கல்வி, சுகாதாரம், பொதுநிர்வாகம், விளையாட்டுத்துறை உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் உதவியையும் பெற்றுக் கொள்ளவுள்ளதாக கூறினார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாதாள உலகத்தினருக்கும் இந்த நாட்டில் தனியானதொரு அரசாங்கத்தை நடத்திச் செல்ல இடமளிக்க முடியாதென குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில், மாகாண ஆளுநர்கள், அமைச்சர் வஜிர அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண தலைமை செயலாளர்கள் அரச அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.