வவுனியாவில் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்! – பொலிஸார் குவிப்பால் பதற்றம்.

வவுனியா, ஓமந்தையில் அமைந்துள்ள மதுபானசாலைக்கு எதிராக மக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டமொன்றை இன்று (சனிக்கிழமை) ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த பகுதி இளைஞர்கள் மற்றும் மக்கள் ஒன்றுதிரண்டு ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து மதுபானசாலை அமைந்துள்ள இடம்வரை ஊர்வலமாகச் சென்று மதுபானசாலைக்கு செல்லும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஓமந்தை பொலிஸார் மற்றும் புளியங்குளம் பகுதிக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸார் இச்சம்பவம் இடம்பெற்ற இடத்தில் குவிக்கப்பட்டதுடன் கலகம் அடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் அதனைப் பொருட்படுத்தாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மதுபானசாலையை உடனடியாக மூட வெண்டும் என கோசங்களை எழுப்பினர். இதனால் பதற்றமான நிலை அங்கு ஏற்பட்டது.

அப்பகுதிக்கு வட மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரனும் வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடனும் பொலிஸாரிடமும் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது பொலிஸார் குறித்த மதுபானசாலை அனுமதியுடன் திறக்கப்பட்டுள்ளதாகவும் தாம் அதனை மூட முடியாது எனவும் தெரிவித்ததுடன் இவ்விடயம் தொடர்பாக அரசாங்க அதிபருடன் வரும் திங்கட்கிழமை ஓர் குழு சென்று கலந்துரையாடியதன் பின்னர் முடிவெடுக்கலாம் எனவும் ஆலோசனை வழங்கியிருந்தனர்.

எனினும் ஆர்ப்பாட்டகாரர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துடன் திங்கட்கிழமை முடிவு எட்டும் வரை மதுபானசாலையை மூட வேண்டும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் சம்பவ இடத்திற்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடினார்.

இதையடுத்து மதுபானசாலை உரிமையாளர்களுடனும் கலந்துரையாடச் சென்ற நிலையில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கும் போது பிரதேச சபையின் தலைவர், ஊடகவியலாளர்களுடன் முரண்பட்டுள்ளார்.

இதனால் தொடர்ந்தும் குழப்பகரமான நிலையில் மதுபானசாலையை திங்கட்கிழமை வரை மூடுவதாகத் தெரிவித்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து அகன்று சென்றனர்.