வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அழைப்பு!

வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அழைப்பு!

எதிர்வரும் 16 ஆம் திகதி யாழ்.பல்கலைகழக மாணவர் அமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியின் போது அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட அமைப்பின் சகல பிரதிநிதிகளும், வவுனியா மாவட்ட சகல பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பொது மக்களும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டுமென கோரப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமையத்தின் நிர்வாக கூட்டம் (சனிக்கிழமை) வவுனியா வாடி வீட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமையத்தின் ஊடகப்பேச்சாளர் கே.தேவராயா இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த அவர்,

“எதிர்வரும் 16ஆம் திகதி பல்கலைகழக முன்றலில் ஆரம்பமாகும் இப்பேரணியானது வலிந்து காணாமல் ஆக்கப்பட அமைப்பின் பிரதிநிதிகள் மாத்திரமன்றி ஒட்டுமொத்த எமது சமூகமும் கலந்து கொள்ளவேண்டுகிறோம்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார் ஏறத்தாள நாற்பதினாயிரத்துக்கும் மேற்பட்டவர்களாக இருந்தும் பர்ணகமுவ ஆணைக்குழுவின் பதிவேட்டின்படி பத்தொன்பதாயிரத்தி தொளாயிரத்தி நாற்பத்தியேழுக்கு மேற்பட்டவர்கள் உறுதிப்படுத்தப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.

அந்தவகையில் இதுவரையிலும் யுத்தம் ஓய்வுக்கு வந்து பத்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அரசோ அரசு சார்பானவர்களோ, இந்த காணாமல் ஆக்கப்படவர்களின் விடயத்தில் ஆக்க பூர்வமான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே, மக்கள் போராட்டமாக எம்மை மாற்றிகொண்டிருக்கும் இந்த போராட்டம் வலுப்பெற்று பெரியதோர் போராட்டமாக வடக்கு கிழக்கில் மேற்கொள்வதற்கு நகர்வுகளை மேற்கொண்டுவருகின்றோம்.

ஆகவே எம்மக்கள் யாவரும் ஒன்றிணைந்து இந்த 16 ஆம் திகதி மேற்கொள்ளவிருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூட வேண்டுமென்று கேட்டுகொள்கிறோம்” என்று குறிப்பிட்டார்.