வடிகான் கால்வாய் சேதம்: சிரமப்படும் மன்னார் மக்கள்!

வடிகான் கால்வாய் சேதம்: சிரமப்படும் மன்னார் மக்கள்!

மன்னார் நகர் மத்திய சுற்று வட்ட பகுதியில் உள்ள வடிகான் கால்வாய் எவ்வித பராமரிப்பும் இன்றி உடைந்த நிலையில் காணப்படுவதனால் பல்வேறு தரப்பினரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக பொது மக்கள் மற்றும் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னார் மத்திய பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள அரச பேருந்து சேவை நிலையத்தின் நுழைவு பகுதியில் உள்ள கால்வாயே இவ்வாறு சேதமாகி காணப்படுகின்றது.

பிரதான பாதைகளை ஒன்றிணைத்து அதன் ஓரத்தில் தொடுக்கப்பட்டுள்ள குறித்த கால்வாயின் மேல் பகுதியில் உள்ள கொங்கிரீட்டினால் அமைக்கப்பட்ட மூடியானது பாதி உடைந்த நிலையில் காணப்பட்ட நிலையில், குறித்த மூடிக்கு பொருந்தாத முறையில் சாதாரணமாக வாய்க்காலானது தற்காலிகமாக பல நாட்களாக மூடப்பட்டு காணப்படுகின்றது.

குறித்த கால்வாய் மூடிகளே பாதசாரிகள் கடவையாக காணப்படுகின்ற நிலையில் உரிய தரப்பினர் இதுவரை குறித்த கால்வாயினை சீரமைக்கவில்லை.

இந்த நிலையில் கால்வாயினூடாகவே அரச பேருந்துகள் பயணிக்கின்றன. அதே போன்று குறித்த உடைந்த கால்வாய் அருகிலே முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான தரிப்பிடமும் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக குறித்த வடிகானை உரிய முறையில் அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.