கடத்தலுடன் தொடர்புடைய கடற்படை அணி கரன்னகொடவின் கண்காணிப்பில்!

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கடற்படை அணி தமது கட்டுப்பாட்டிலேயே இருந்ததென இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்காக நேற்று (திங்கட்கிழமை) வசந்த கரன்னகொடவிடம் சுமார் 8 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டது. இதன்போது அவர் இவ்விடயத்தை ஏற்றுக்கொண்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அவரை மீண்டும் நாளை காலை விசாரணைக்கு சமூகமளிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் வசந்த கரன்னகொடவின் பங்களிப்பு காணப்படுகின்றதென ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வழக்கில் 14ஆவது சந்தேகநபராகவும் கரன்னகொட பெயரிடப்பட்டுள்ளார்.

இதேவேளை, வசந்த கரன்னகொட தாக்கல்செய்த அடிப்படை உரிமை மனுவின் பிரகாரம், அவரை கைதுசெய்வதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.