ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலங்களில் நாடு பாரிய கடன் சுமையில் இருந்தது. 8.5 ரில்லியன் ரூபாய் கடன் சுமை நாட்டில் காணப்பட்டது. இதனை கடந்த காலங்களில் எந்தவொரு அதிகாரியும் சுட்டிக்காட்டவில்லை.

வெள்ளை வேன்களுக்கு அஞ்சியே பலர் இதுகுறித்து கதைக்க முன்வராது போய்விட்டார்கள்.

தற்போது கடந்த அரசாங்கத்தினர் இவற்றை மறுத்து வருகிறார்கள். அப்படியானால் ஏன் இரண்டு வருடங்களுக்கு முன்னரே தேர்தலை நடத்த வேண்டும்?

இன்று நாம் முழுமையான ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளோம். எமது ஆட்சிக் காலத்தில் நாம் பல வழிகளில் நாட்டை முன்னேற்றியுள்ளோம்.

ஜனநாயகத்திற்கான அத்திவாரத்தை நாம் பலமாகப் போட்டுள்ளோம். இதனை சர்வதேச நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.

எனவே, எஞ்சியுள்ள சில மாதங்களிலேனும் ஜனாதிபதி எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.