கண்ணீரில் மூழ்கியது யாழ் தேசம்!

ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகிய எழுச்சிப்பேரணி முற்றவெளியில் கவனயீர்ப்பு போராட்டத்துடன் நிறைவுபெற்றது.

இதன்போது காணாமலாக்கப்பட்ட உறவுகளின் ஒளிப்படங்களை கைகளில் ஏந்தி, ‘மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்’ என கோசம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இங்கு கண்டன அறிக்கையும் வாசிக்கப்பட்டது.

இந்த பேரணி இன்று காலை 10.00 மணிக்கு பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகியது.

அங்கிருந்து வைத்தியசாலை வீதியூடாக முற்றவெளியை வந்தடைந்த நிலையில், தமிழர்களுக்கு நீதி வேண்டும் என ஐ.நாவைக் கோரிய இந்த நீதி கோரும் போராட்டம் கண்ணீருடன் நிறைவுபெற்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஊடாக இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பேரணியில் கலந்துகொண்டவர்கள்

– கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவேண்டும்.
– காலநீடிப்பு தமிழர் இருப்பை ஒழிக்கவா?
– 10 ஆண்டுகள் ஏமாற்றியது போதாதா?
– சர்வதேசமே போர்க் குற்றவாளியைப் பாதுகாக்காதே
– நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்து
– அரசைப் பாதுகாப்பதா? அல்லது மக்களைக் பாதுகாப்பதா? ஐநாவின் உருவாக்கம்
– அரசியல் கைதிகளை விடுதலை செய்
– மனிதப் புதைகுழிகளின் களமா? தமிழர் தாயகம்

போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளைத் தாங்கியவண்ணம் பேரணி முற்றைவெளியை நோக்கி நகர்ந்து சென்றது.