பொதி செய்யப்பட்டும், பொதி செய்வதற்கு தயாரான நிலையில் குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 175 கிலோகிராம் மான் மற்றும் மரை இறைச்சியை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 4 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள சுற்றுவட்ட அதிகாரி என்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

தங்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து ஏறாவூர் தெற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தொகுதியைச் சுற்றிவளைத்தபோது, மான் இறைச்சியை வெட்டி துப்புரவு செய்து பொதியிட்டுக் கொண்டிருந்த சந்தேக நபர்களையே கைது செய்ததாகவும் அவர் கூறினார். 

இதேவேளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலுள்ள தொப்பிகல (குடும்பிமலை) மலைப்பகுதிக் காடுகளிலிருந்து இறைச்சிக்காக இந்த மான்களும் மரைகளும் வேட்டையாடப்பட்டதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காட்டுயானைகள் அட்டகாசம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஜெயந்தியாய மீள்குடியேற்றப் பிரதேசத்தில் சனிக்கிழமை புகுந்த யானைகளின் அட்டகாசத்தால் ஒரு கடை மற்றும் நெற் களஞ்சியசாலையும் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஜெயந்தியாய மீள்குடியேற்ற கிராமத்தை அண்மித்த பொத்தானை மற்றும் வெல்லாமைச்சேனை காட்டுப் பகுதியிலிருந்து வந்த யானைகள் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள சாப்பாட்டுக் கடை மற்றும் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த கடை என்பவற்றுக்குள் புகுந்து கடையிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியதுடன், களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நெல் மூட்டைகளையும் சேதமாக்கியுள்ளது.

யானைகளின் தொல்லைகளிலிருந்து எங்களது பகுதியை பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் அண்மையில் யானை தாக்கியதால் ஒருவர் இறந்துள்ளதுடன், சிலரது வீடுகளையும் சேதமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.