கிளிநொச்சியில் நேற்று (27.03.2019) ஆளுநரின் மக்கள் சந்திப்பின்போது பெறப்பட்ட உணவில் புளு காணப்பட்டமை தொடர்பில் சம்மந்தப்பட்ட கடையினை தொடர்ந்தும் திறந்துள்ளமை தொடர்பில் ஆளுநர் நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் உணவகம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட உணவு பொதியில் புளு காணப்பட்டமை தொடர்பில் ஆளுநர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதார பரிசோதகர்களிற்கு உத்தரவிட்டிருந்தார்.

குறித்த உத்தரவிற்கமைய குறிப்பிடப்பட்ட தனியார் உணவகம் மீது கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கில் 2 நாட்கள் கடையினை மூடி சுத்தம் செய்யுமாறு நீதிமன்றினால் பணிக்கப்பட்டது.

குறித்த கட்டளையையும் மீறி தொடர்ந்து குறித்த உணவகம் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றுக்கொண்டிருந்தமை தொடர்பில் ஆளுநரிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு இரவு 10 மணியளவில் வருகைதந்த வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், அங்கிருந்த அதிகாரிகளை கடுமையாக சாடினார்.

மக்களிற்கு இவ்வாறான சுகாதாரமற்ற உணவுகள் வழங்கப்படுகின்றமை தொடர்பில் கடுமையாக அதிகாரிகளை சாடிய ஆளுநர், குறித்த சம்பவம் தொடர்பில் கடுமையானன நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த ஆளுநர்,
மேற்குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்தார். குறித்த உணவகம் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்ட சுகாதார பரிசோதகர் தனது கையடக்க தொலைபேசியை இயங்காது யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளதாக அவரது உயரதிகாரி குறிப்பிட்டதாகவும், இவ்வாறு செயற்படுவது தொடர்பில் விசனம் தெரிவித்தார்.

சுகாதாரமற்ற உணவுகள் தொடர்பில் ஊடகங்களின் ஊடாக வெளிக்கொண்டுவர மக்கள் முன்வர வேண்டும் எனவும், இவ்வாறான சுகாதாரமற்ற உணவகங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க முற்பட்ட சமயம் தனக்கே இவ்வாறான உணவு கிடைத்துள்ளமை தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 24 மணிநேரத்திற்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளை பணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாகவும் ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.