ஜனாதிபதி குழப்பத்தில் உள்ளதாக சிறிநேசன் தெரிவிப்பு!

ஜனாதிபதி தற்போது குழப்பத்தில் உள்ளதாகவும் அதனாலேயே அவர் வழங்கிய வாக்குறுதிகளை தூக்கியெறிந்துவிட்டாரென நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஆயித்தியமலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“தமிழ் மக்களின் வாக்குகளின் மூலமே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்தார். அவர் தற்போது தடுமாறிப்போயிருக்கின்றார். அரசியல் தீர்விற்கு அவர் உடன்பாடில்லை. கூறிய வார்த்தைகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டார்.

நாங்கள் தேர்தலில் யாரை தோற்கடித்தோமோ அவரை பிரதமராக்கியிருந்தார். மஹிந்த அணியினரே அரசியல் யாப்பை தருவதற்கு குழப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

நாங்கள் தேர்தலில் போட்டியிட்டபோது எங்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய போன்றவர்களாவர்.

இவர்கள் கடந்த காலத்தில் வாக்குகளின் மூலம் எமது சகோதரர்களை கடத்தினார்கள், காணாமலாக்கினார்கள். இவர்களுக்கு எதிராக வாக்கு கேட்டே நாங்கள் வந்தோம்.

யாருக்கு எதிராக வாக்கு கேட்டு நாங்கள் வென்றோமோ அவர்களிடம் சரணாகதி அரசியல் நடத்தி எம்மையே சிலர் விமர்சிக்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.