மனித எச்சங்களின் ஆய்வுகளில் முரண்பாடு: தவறு நேர்ந்திருப்பதாக சி.வி. சந்தேகம்!

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் ஆய்வு முடிவுகளில் முரண்பாடுகள் காணப்படுவதால் அதில் ஏதோ தவறு உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

மேலும் மன்னார் மனித புதைகுழி விடயத்தில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“மன்னார் மனித புதைகுழி தொடர்பான கார்பன் பரிசோதனை அறிக்கையை ஏற்பதா, இல்லையா என்பது தொடர்பாக நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்.

அமெரிக்காவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட மனித எச்சங்கள் 500 வருடத்திற்கு முற்பட்டவை என கார்பன் பரிசோதனை அறிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆனால் தற்போது இங்கு பெறப்பட்டுள்ள மனித எச்சங்கள் 50 வருடத்திற்குட்பட்டவை என பரசீலித்துக் கூறுகின்றனர்.

எவ்வாறு இது சாத்தியப்படும்? இதில் எங்கேயோ முக்கியமான பாரதூரமான தவறு நடந்திருக்கிறது. எனவே மனித எச்சங்கள் மீண்டும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.