ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு! மனம் திறந்த சி.வி.விக்கி

வடக்கு கிழக்கு மக்களுக்கு தவறு செய்திருக்கின்றோம் என்பதை உணர்ந்துகொண்டு தெற்கிலிருந்து ஒரு தீர்வு முன்வைக்க வேண்டும் என வடக்கு முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்க தமிழர்கள் மூன்றாம் தரப்பு நடுநிலையை கோருகின்றனர்.

அந்த வகையில் மூன்றாம் தரப்பு நடுநிலையாளராக இந்தியாவிற்கு முன்னுரிமை வழங்க வேணடும். இந்தியா நடுநிலையாக வந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

ஏனெனில் இலங்கை இந்திய உடன்படிக்கையில் 13ம் திருத்த சட்டம் குறித்து தமிழர்கள் சார்பில் இந்தியாவே கையெழுத்திட்டது.

இந்நிலையில், எங்களின் தேவையை புரிந்துகொண்டு, எங்களின் பிரச்சினையை ஏற்றுக்கொண்டு தீர்வை வழங்க முன்வரும் எவரையும் நாங்கள் ஆதரிப்போம். எனினும், வெறும் சொற்களால் வழங்கும் வாக்குறுதியை ஏற்கமுடியாது.

ஆகையினால் ஒரு புரிந்துணர்வுக்கு வர மூன்றாம் தரப்பு உதவிசெய்ய வேண்டும். எவ்வாறாயினும், நாங்கள் எந்த சமூகத்திற்கும் எதிரானவர்கள் கிடையாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.