ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் எம்.கே.சிவாஜிலிங்கம்?

நான் 2010 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன் வந்தமைக்கான பிரதான காரணம் போர் குற்றவாளிகள் இருவர் பிரதான வேட்பாளர்களாக போட்டியிட்டமையாகும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேகா ஆகியோரை ஆதரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் தமிழ் மக்கள் காணப்பட்டனர்.

இந்நிலையில் தமிழர் தரப்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஒருவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்த வேண்டுமென முன்வைத்தேன்.

இது ஏற்கப்படாது போனதால் தான் போர் குற்றவாளிகளுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினேன்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பிரதான கட்சிகளை ஆதரிக்க கூடிய வலுவான காரணங்களோ, சாதாரண காரணங்களோ இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து வேட்பாளர் களமிறக்கப்பட வெண்டுமென்பது எனது நிலைப்பாடாகும்.

வரலாற்றில் தமிழர் நம்பி ஏமாந்த இறுதித் தலைவர்களாக மைத்திரிபாலவும் ரணிலும் இருக்க வேண்டும். இனியும் நம்பி ஏமாறக்கூடாது என்பதே எனது கருத்தாகும்.

2010 ஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை கொண்டு செல்ல வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி தேவை, பொறுப்பு கூறுதல், சர்வதேச ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட நஷ்ட ஈடு, அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற விடயங்களை நான் குறிப்பிட்டிருந்தேன்.

அத்துடன் சிங்களத் தரப்புக்கு ஒரு பிரதமரும் தமிழ் தரப்புக்கு மற்றுமொரு பிரதமரும் நியமிக்கப்பட வேண்டுமென்பது எட்பட பல கோரிக்கைகளை விடுத்திருந்தேன்.

அப்போது கிண்டல் அடித்தார்கள், தற்போது என்னால் கூறப்பட்ட விடயங்கள் நிஜமாகி வருகின்றன.

அச்சமயம் அமெரிக்க தூதராக இருந்த பற்றீசியா இவ்விடயங்களை தனது தலைமையகத்துக்கு 2010 ஜனவரி 15ஆம் திகதி பின்னர் அனுப்பியிருந்தார். இத்தகவலை விவ்விலீக்ஸ் வெளிப்படுத்தியிருந்தது.

தூதர் அனுப்பிய செய்தியில் சர்வதேச விசாரணை தேவை என்பதை வெளிப்படையாக ஒரேயொரு தமிழ்த் தலைவர் சிவாஜிலிங்கம் கூறுவதாக குறிப்பிட்டிருந்தார். இதுவே ஆதாரமாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.