இலங்கையில் இராணுவத்தளம் அமைக்கும் திட்டம் இல்லை!

இலங்கையில் நிரந்தரமான இராணுவத்தளம் அமைக்கப்போவதாக வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லையென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிரந்தர இராணுவத்தளத்தை அமைக்க அமெரிக்கா திட்டமிடுவதாக வெளிவரும் செய்திகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் இராணுவ ரீதியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா முயற்சிக்கின்ற போதிலும், இங்கு இராணுவத்தளத்தை அமைப்பதற்கு எந்தவொரு திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

அவ்வாறான திட்டம் ஒருபோதும் தமது பாதுகாப்பு ஒத்துழைப்பின் அங்கமாக இருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

எதிர்காலத்தில் இங்கு, அமெரிக்காவின் எந்தவொரு நிரந்தர தளத்தையும் அமைக்கும் திட்டங்கள் எதுவும் இல்லையென தெரிவித்த அமெரிக்க தூதரக பேச்சாளர், திருகோணமலை துறைமுகத்தில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல்கள் எதுவும் தரித்து நிற்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு எந்த நேரத்திலும், அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு வரக்கூடியளவுக்கு இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், விமானந்தாங்கி கப்பல்கள் எதுவும் இலங்கைக்கு வரும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.