கருணாவை ஏன் கைது செய்யவில்லை?

கருணாவை ஏன் கைது செய்யவில்லை?

தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினராக இருந்த கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லையென சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இன்றைய நீதி அமைச்சு தொடர்பாக பல தடவை நீதி அமைச்சரிடம் நேரடியாகவும் இந்த நாடாளுமன்றத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

மிக முக்கியமாக இலங்கையில் யுத்தம் ஏற்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த பயங்கரவாத தடைச்சட்டம் யுத்தம் முடிந்து 10 வருடங்களாகியும் இன்று வரை நடைமுறையில் இருக்கின்றது.

அந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் அதாவது சாட்சிகள் இல்லாமல் ஒருவரை கைது செய்ய முடியும்.

கைது செய்கின்ற நபர் அவரை துன்புறுத்தி அந்த துன்புறுத்தலின் மூலம் அவர் தான் குற்றங்களை செய்ததாக ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு நீண்டகால தண்டனை வழங்குவதற்கு விசாரணையற்ற முறையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு குற்றத்தடுப்பு பிரிவுக்கு ஜனாதிபதியால் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

அந்த சட்டத்தின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மறைமுகமாக உதவி செய்ததின் அடிப்படையில் 100இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் கைதிகளாக 10 வருடங்களுக்கு மேலாக இன்றும் இருக்கிறார்கள்.

அவர்கள் சிறு சிறு குற்றங்கள் செய்ததாக தெரிவித்திருக்கின்றனர். இவர்கள் அரசியல் ரீதியான கைதிகள்.

தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரனை அதாவது கருணா அம்மான் என்று கூறுகின்ற அந்த நபரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாங்கள் ஏன் கைது செய்யவில்லை? விசாரணை செய்யவில்லை? என்பதை அமைச்சர் இந்த சபைக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் தெளிவுப்படுத்த முடியுமா? என்று நான் கேட்டு கொள்ள விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

சார்ள்ஸ் நிர்மலநாதனுடைய உரையில் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பான கேள்விகள் அரசாங்கத்தை எச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.