கொழும்பில் ஹோட்டல்களில் உணவு பெறுவோருக்கான அறிவித்தல்!

கொழும்பில் சிறிய ஹோட்டல்கள் முதல் பாரியளவிலான உணவு களஞ்சியங்கள் அனைத்தும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

அடுத்து சில நாட்களில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று, கொழும்பு மாநகர சபையின் தலைமை சுகாதார அதிகாரி டொக்டர் றுவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் கொழும்பில் தான சாலைகள் முழுமையாகக் கண்காணிக்கப்படும். பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் இந்தப் பணிகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் தாம் கொள்வனவு செய்யும் உணவுப் பொருள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருக்குமாயின் 0112 676 161 என்ற தொலைபேசியின் ஊடாக அறிவிக்க முடியும்.

உணவின் தரம் தொடர்பான சட்டவிதிகளுக்கு அமைவாக உணவுத் தயாரிப்புக்கான உபகரணங்கள் இரவு வேளையில் உரிய முறையில் துப்பரவு செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் ஹோட்டல்களில் உணவு தயாரிக்கப்படுவதாக அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதனையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பல பிரபல ஹோட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், சில உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இவற்றுள் அரச நிறுவனங்களில் செயற்படும் சிற்றூண்டிச்சாலைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.