அரசியல் கைதிகளின் விடுதலையில் தலையிட முடியாது!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையில் எந்ததொரு தலையீட்டினையும் தற்போதைய நிலைமையில் மேற்கொள்ள முடியாதென அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே தலதா அத்துகோரள இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“பயங்கரவாத தடைச்சட்டத்தில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விவகாரத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையால் அவர்களின் விடுதலை குறித்து எந்ததொரு நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஆட்சியில் நீதிமன்ற சுயாதீனம் மற்றும் நீதிப்பொறிமுறையை செயற்படுத்த முடியாதவர்களே எதிரக்கட்சியில் இருந்துகொண்டு எமது ஆட்சியை விமர்சிக்கின்றனர்.

ஆனாலும் எமது அரசு, மக்களுக்கு அளித்த வாக்குறுகளை நிறைவேற்றும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில் எம்மால் உருவாக்கப்படும் சிறப்பு நீதிமன்றம் பக்கச்சார்பற்றதாக நிச்சயம் செயற்படுவதுடன் நிலைத்து நிற்கும்.

இதேவேளை புனர்வாழ்வு மையங்களை அமைத்து சிறைக்கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கும் வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது” என தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.