திருமணத்திற்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்கு சென்ற இளம்பெண் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் – தட்சணா மருதமடு, பாலம்பிட்டியை சேர்ந்த கைலாசபிள்ளை ஹேமா எனும் 28 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹேமாவுக்கு எதிர்வரும் பத்தாம் திகதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வந்துள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் மணப்பெண்ணான குறித்த இளம் பெண் தலைவலி ஏற்பட்டதை தொடர்ந்து மயக்கமடைந்துள்ளார்.

இந்த நிலையில் அவரை உறவினர்கள் உடனடியாக மன்னார் மடு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணை பரிசோதித்த வைத்தியர்கள் அவரின் தலையில் கட்டி இருப்பதை கண்டறிந்து அதனை நீக்குவதற்காக சத்திரசிகிச்சையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் அந்த பெண் கோமா நிலைக்கு சென்றுள்ளதுடன், நேற்று பிற்பகல் அவர் உயிர் பிரிந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் அப்பகுதியையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.