பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் திமுத் கருணாரத்ன!

விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன மன்னிப்பு கோரியுள்ளார்.இது குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“தனது வாகனம் விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதியிடம் தான் முதலில் மன்னிப்பை கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த முச்சக்கரவண்டி சாரதி, சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்து தனது கைகளில் ஏற்பட்டமையினால், முச்சக்கரவண்டி சாரதிக்கு எதிர்காலத்தில் தேவையான அனைத்து விடயங்களையும் தானே செய்துக் கொடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகி, சட்டத்திற்கு மதிப்பளித்து பின்பற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னால் ஏற்பட்ட இந்த விபத்து இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரரின் கைகளினால் ஏற்படக்கூடாதொரு செயல் என்பதனை தான் நன்கறிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் தான் அனைத்து தரப்பினரிடமும் மன்னிப்பை கோருவதாகவும் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன கூறினார்.